
ஆட்டோ என்றதும் பலருக்கும் சூடு போட்ட மீட்டர்கள் தான் நியாபகம் வரும்....அப்படி இருந்தாலும் சில சமயங்களில் நம் பயணிக்கும் ஆட்டோ பயண்ங்களை நம்மால் மறக்க முடியாத சம்பவமாய் மனதில் பதிந்து விடும்...அப்படி பதிந்த சில பயணங்களைத் தான் உங்களுடன் அசைப்போட்டு உங்களையும் பயணிக்க வைக்கப் போகிறேன்...
பெரும்பாலும் நாம் ஆட்டோக்களில் பயணம் செய்யும் பொழுது பல வித்தியாசமான ஓட்டுனர்களை இல்லை இல்லை மனிதர்களை.... சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்!!!
நாம் ஆட்டோக்களில் ஏறும் முன் அவர்கள் பேச்சிலேயே ஒர் அளவு எடைப் போட்டுவிடலாம் அவர்களை....போகும் இடம் சொன்னதும் நமக்கும் அவருக்கும் நிகழும் முதல் உரையாடல் இதுவாகதான் இருக்கும்
"எவ்வோளோ கொடுப்பிங்க"?
இருவருக்கும் ஏற்றவாறு நாம் ஒரு தொகை சொன்னால் இனிதாகப் பயணம் தொடங்கும்... அப்படி இல்லை என்றால் தொகையில் சில மாற்றங்களோடு தொடரும்... அப்படி இருவருக்கும் சரிப்படவில்லை என்றால் அத்தோடு முடிந்து விடும்.....
சில ஓட்டுனர்கள் இடத்தை சொன்னதும் எங்கோ சுற்றுப்பயணம் செய்யப் போகும் அளவு தொகையை கேட்ப்பார்கள் பக்கத்தில் ஒரு இடம் சொன்னால்,பாண்டிச்சேரி போவதற்க்கான தொகையை சொல்வார்கள் சிலர் .அப்போ நமக்கு வரும் பாருங்கள் கோபம். அப்படியே கையில இருக்கும் பேக்'கால் அவரை "ஏண்டா இப்டி பகல்கொள்ளை அடிக்கறிங்க?" ன்னு நாலு சாத்து சாத்தனும்ன்னு தோனும். ஒன்றுமே சொல்லாமல் அடுத்த ஆட்டோவை தேடத் தொடங்கி விடுவோம்...சிலர் இருவருக்கும் ஏற்ற பயணத் தொகையை சரியாக கேட்பார்கள் அப்போதே நமக்கு அந்த ஓட்டுனர் மீது ஒரு மதிப்பு வந்துவிடும்...அப்படி தொடங்கும் சில பயணங்கள் மகிழ்ச்சியாய் அமையும்
சில ஓட்டுனர்கள் அரசியல் தொடங்கி, குடும்ப விசயங்களையும் பகிர்ந்து கொள்வார்கள் சில பேச்சுகள் நம்மை மிகவும் கவரும்....
ஒரு சமயம் அலுவலகத்தில் இருந்து வீடு வர நானும் என் தோழியும் ஆட்டோவில் போகலாம் என்று எங்கள் பயணத்தை தொடங்கினோம்...
நாங்கள் பேசிக்கொண்டே வர எங்கள் உரையாடலில் அவரும் கலந்துக் கொண்டார்.... அப்படி பேசிக்கொள்ளும் பொழுது...கணவன் மனைவிக்குள் ஒரு புரிதலில் இருந்துவிட்டால் பிரச்சனையே இல்லை...
எனக்கு திருமணம் முடிந்து 25 வருடங்கள் ஆகப் போகுது என் மனைவிக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு வந்தது இல்லை இருவரும் நல்ல புரிததலில் இருக்கிறோம் என்று அவர் சொன்னதைக் கேட்டு...
எனக்கும் என் தோழிக்கும் ஆச்சர்யம் அவரது பேச்சில் பயண நேரமே தெரியவில்லை....
சில ஓட்டுனர்கள் அரசியலை அப்படி பேசுவார்கள்.... சிலர் சரியாகவும், சிலர் புரியாமலும் பேசிக் கொண்டு வருவார்கள்..அப்படி அவர்கள் பேசும்போது அவர்கள் தற்போது ஆளும் அரசு எப்படி செயல்படுகிறது என்று சற்று சரியாகவே யூகிக்க முடியும்!
காலை அலுவலகத்திற்கு தாமதம் ஆனதால் ஆட்டோவில் போகலாம் என்று ஆட்டோ கூப்பிட்டு செல்லும் இடம் சொன்னதும் நியாயமான தொகை கேட்டதால் ஒன்றுமே சொல்லாமல் என் பயணத்தை தொடங்கினேன்... சிறிது நேரத்தில் நன்றாக பேசினார். அப்படியே எங்கள் உரையாடல் தொடரும் போது...
உங்களுக்கு ஒரு நாள் எவ்வளவு கிடைக்கும் என்றுக் கேட்டேன்..நல்ல சவாரி கிடைத்தால்,சில நாட்களில் 200லிருந்து 500 வரை கூட கிடைக்கும்.சில நாட்களில் சரியான சவாரியே கிடைக்காமல் ,பெட்ரோல் செலவு வைப்பதும் உண்டு. என்றார்
ஆட்டோ வாடகை எவ்வளவு என்றால் 1150 ரூபாய் என்றார் மாதா மாதமா?என்றால் இல்லை வாரா வாரம் என்றார்!!!
ஒரு நாளைக்கு 200 ரூபாய் கிடைத்தால் அவருக்கு வாரம் 1400 கிடைக்கும் அதில் 250 சேமிக்க முடியும் அதிலும் எரிப்பொருள் செலவெல்லாம் போக 150 மிஞ்சும் என்றாலும் மாத வருமானமாய் மிக குறைந்த வருமானமே அவர்களுக்கு கிடைகிறது..அதில் அவர்கள் குடும்பத்தையும் பார்த்துக் கொண்டு பிள்ளைகளையும் படிக்க வைப்பது என்பது எவ்வளவு கடினம் என்று யோசித்தால் கஷ்டம் தான்!!!!
சில ஓட்டுனர்கள் தவறுகள் செய்வதால் பல நல்லவர்களை நாம் கவனிக்க தவறிவிடுகிறோம்....
ஆட்டோவில் பணத்தை மறதியாக விட்டுச் சென்றாலும் அதை கவனமாக காவலரது துணையுடன் உரியவரிடம் சேர்க்கும் பல ஓட்டுனர்களை பற்றி நாம் கேள்விப் பட்டிருக்கிறோம்!!!!