அப்பா..... இப்பவே கண்ணக்கட்டுதே!!!!!  

பதித்தவர் : எழில்பாரதி in

நீங்க சின்ன வயசில படிச்ச பாட்டெல்லாம் ஒரு பதிவா போடுங்கன்னுநம்ம காதல் இளவரசன்.... அருட்பெருங்கோ அழைப்பு விட, சரி நாம சின்னதில படிச்ச பாட்டுதானே போட்டுடா போச்சுன்னு பார்த்தா,தெரிந்திருந்த பாடல்களில் பாதி பாடல்களை அவரே பதித்து விட்டார். சரி வேறு பாட்டு போடலாம்ன்னு பார்த்தா , மிச்சம் வைச்ச ஒன்று ,இரண்டையும் பதித்து விட்டார்.... என்னடா எழிலுக்கு வந்த சோதனை.நாம என்னத்தை பதிக்க போறோம்ன்னு யோசித்த போதுதான்

மூன்று பெரிய ஜாம்பவான்கள் நினைவுக்கு வந்தாங்க.அடடா.. கையில் வெண்ணையை வைச்சுக்கிட்டு நெய்'க்கு அலைவானேன்னு,அடிச்சு, புடிச்சு அப்பாயின்மெண்ட் வாங்கிட்டேன்ல்ல. அவங்களும், எம்மேல பரிதாபப்பட்டு, அவங்க பிஸி ஷடியுல்ல கொஞ்சோண்டு , நேரத்தை ஒதுக்கி எனக்கு ரொம்ப உதவி செய்தார்கள்....இதுல ஒருத்தர் சொல்லிக்கொடுத்ததற்க்கு குருதட்சணை வேற கேட்டார்.


அவர்கள் யார்? & அவங்க கேட்ட குருதட்சணை என்ன?ன்னு இறுதியில் தெரிஞ்சுக்கலாமா?. இப்பொழுது நம்ம V.V.I.Pகள் சொல்லிக் கொடுத்த பாடல்களை பார்ப்போம்...

முதல் பாடலை ஸ்பான்ஸர் பண்ணவர் ரொம்ப ஸ்பீடு.அவர் பாட்டு சொல்லும் போது எனக்கு சரியா புரியவே இல்ல.சீடியை வேகமா ஃபார்வேட் பண்ண மாதிரி ,மின்னல் வேகமா,ராகத்தோட பாடிக் காட்டினார்.. "சார், கொஞ்சம் பொறுமையா சொன்னிங்கனா நோட்டுஸ் எடுக்க உதவியா இருக்கும்ன்னு கெஞ்சி கேட்டா (கல்லூரிலக் கூட நோட்ஸ் எடுக்க இவளோ கஷ்டப்படல)... அவர் இரண்டு வரி பொறுமையா சொல்லிவிட்டு

அடுத்தடுத்த வரிகளை ஜெட் வேகத்திற்கு கூறினார்.மறுபடியும், கொஞ்சம் பொறுமையா சொல்லுங்களேன்"என்று கேட்டது தான்.வந்துச்சு பாருங்க அவருக்கு கோவம்,பாதி(பாரதி என்பதை அவர் அப்படிதான் கூப்பிடுவார்) உனக்கு உங்க மிஸ் சொல்லிக் கொடுத்தாங்கல?அப்புறம் ஏன் இப்படி என்னை போன் போட்டு தொந்தரவு பண்ணுறே?ன்னு சொல்லி போனை கட் பண்ணிடார்

அச்சச்சோ நாம தான் அவசரப்பட்டுடோமோன்னு தோனுச்சு. சரி..,அவர் சொன்ன வரை உங்களுக்கு தந்திருக்கேன்.

அவர் சொன்னப் பாடல்...

"குள்ள குள்ள வாத்து

குவா குவா வாத்து

மெல்ல உடலை சாய்த்து

மேலும் கீழும் பார்த்து

செல்லமாக நடக்கும்

சின்னமணி வாத்து!!!!"

திரும்ப அவரை கேட்டால்,அவர் சிதம்பரத்தில் இருந்து சென்னை வீடு தேடி வந்து வந்து அடிக்கும் அபாயமிருப்பதால், வேறு யாரிடம் கேட்கலாமென்று யோசிக்கையில் ஒரு மேடம் நியாபகத்துக்கு வந்தாங்க அவங்க கிட்ட கேட்டா பாடல் கிடைக்கும் ஆனால் அவங்க சொல்லுவாங்களா இல்லை,இதுக்கெல்லாம் நேரம் இல்லைன்னு சொல்லிடுவாங்கன்னு கொஞ்சம் டவுட்டு இருந்தது... மேடம் இந்த சின்ன புள்ளைக்கு கொஞ்சம் உதவி செய்யுங்க. ஒரு பாட்டு சொல்லுங்கன்னு பணிவா கேட்டதும். சும்மா சொல்லக்கூடாது,எம்புட்டு ஆர்வமா அவங்க நேரத்தை ஒதுக்கி ஒரு பாட்டு சொன்னாங்க. அவங்களுக்கு ஒரு ஸ்பெசல் தாங்க்ஸ். அப்பாடல்....

யானை யானை அழகர் யானை

அழகரும் சொக்கரும் ஏறும் யானை

குட்டி யானைக்கு கொம்பு முளைச்சதாம்

பட்டணம் எல்லாம் பறந்து போச்சாம்..........

இன்னும் பாடல்கள் கிடைக்குமான்னு இல்லாத மூளையை கசக்கி யோசிக்கும் பொழுது ஒருத்தவங்க நினைவுக்கு வந்தாங்க வந்தாங்க. மேடம் பேசும்போதே சண்டை போடுவாங்களே?.நமக்காக பாட்டெல்லாம் பாடுவாங்களான்னு யோசிக்கிட்டே போன் போட்டு மேடம் ஒரு பாட்டு வேணும்ன்னு கேட்டதும்

அதெல்லாம் முடியாதுன்னு ரொம்ப அடம் பிடிச்சாங்க ரொம்ப நேர கெஞ்சல்கள்,கொஞ்சல்களுக்கு பிறகு,போனாப் போவுதுன்னு என்மேல் பரிதாபப்பட்டு, ஒரு பாட்டு சொன்னாங்க...

அவங்க சொன்ன பாடல்

தம்பி தம்பி என்ன வேண்டும்?
பழம் வேண்டும்
என்ன பழம்
?
பலாப்பழம்
என்னப் பலா
?
வேர்ப் பலா
என்ன வேர்
?
வெட்டி வேர்
என்ன வெட்டி
?
விறகு வெட்டி
என்ன விறகு
?
மா விறகு
என்ன மா
?

அம்மா!!!

எப்படியோ பெரிய பெரிய ஆளுங்ககிட்ட கெஞ்சி பாட்டெல்லாம் போட்டாச்சுன்னு இப்போதான் திருப்தி).

இவங்க பாட்டெல்லாம் கேட்டப்பறம் ,நமக்கும் பாடல் பாடணும் போல தோணுது இல்ல.?.எனக்கும் அப்படி தோனுதே..!!! எவ்வளவோ பண்ணிட்டோம், இதைப் பண்ண மாட்டோமா?:P

இதையும் "காதை மூடிக்கிட்டு" கேட்டுருங்க மக்களே.

கஷ்டப்பட்டு ஃபிளாஸ்பேக் கொசுவத்தியெல்லாம் சுத்தி ,சுவத்துலல்லாம் முட்டிக்கிட்டு யோசிச்சதுல ,நான் சின்ன வயசுல பாடின ரெண்டு பாட்டு ஞாபகத்துக்கு வந்துச்சு (அப்பவே நானெல்லாம் பெரிய பாடகியாக்கும்:)

ரெடி.. ஒன்..டூ.. திரி...

"அதோ பாரு காக்கா

கைடையில விக்கிது சீக்கா

பொண்ணு வரா சோக்கா

எழுந்துப் போடா மூக்கா!!!"

எப்டியிருக்கு என்னோட கருத்தாழம் மிக்க பாட்டு.

அட, இதுக்கே ஆனந்தக் கண்ணீர் விட்டா எப்படி?

உங்களுடைய அன்பு வேண்டுக்கோளுக்கிணங்க இன்னொரு பாட்டையும் பாடிடறேன்.கேட்டுக்கோங்க..

இந்தப் பாடல் எங்க ஊருல "ஜேம்ஸ் பாண்டு 007" விளையாடும்போது (அதாங்க கண்ணாமூச்சின்னு சொல்லுவாங்களே ) பாடுகிற பாடல்.


"கண்டுபிடிப்பவர்: மரங்கொத்தி குருவி

ஒளிந்துக்கொள்பவர்கள்: ஏன் ஏன் குரருவி

கண்டுபிடிப்பவர்: பல்ல வலிக்குது

ஒளிந்துக்கொள்பவர்கள்: நெல்லைல் கொருச்சிக்கோ

கண்டுபிடுப்பவர் : மாப்புட்டிக் காணும்

ஒளிந்துக்கொள்பவர்கள்: தேடிப் புடிச்சிக்கோ..."

இதைப்பத்தி சொல்லும்போது எனக்கு இன்னொரு பாட்டு ஞாபகத்துக்கு வருது.பாடவா?,.,

சரி சரி அழுவாதிங்க.. இத்தோட விட்டுறலாம்.

எனக்கு பாடல்களை சொல்லித்தந்த அந்த V.V.I.Pகள் யாருன்னு தெரிஞ்சுக்க ஆவலா இருக்கிங்களா?

எனக்கு உதவிய அந்த ஜாம்பவான்கள்.........

என் சகோதரியின் மகன் அகிலன், இவரு L.K.G படிக்கிறாரு... பார்க்கதான் அமைதியா இருப்பாரு கேள்வி கேட்க தொடங்கினா நமக்கு பதில் சொல்ல முடியாது


என் தோழியின் மகள் யாழினி இவங்களுக்கு 2 வயது மேடம் பாட்டுல மட்டும் இல்ல போஸ் கொடுக்கிறதலயும் செம்ம புத்திசாலி

என் மாமா மகள் கனிமொழி இவங்களும் L.K.G படிக்கிறாங்க ........ இவங்க எப்போவும் போன் பேசினா சண்டைதான் போடுவாங்க.....


இவங்க எல்லோரும் கேட்ட குருதட்சணை "ஐஸ்கிரிம்"

இந்த ஆட்டத்துக்கு நான் அழைப்பவர்கள்..

1. மொழியோடு பயணம் செய்யும் அண்ணன் பிரேம்குமார்

2. மத்தாப்பாய் ஜொலிக்கும் திவ்யா மாஸ்டர்

3. புதியதாய் வலையுலகில் அறிமுகமான உளறல் சத்யா....

மனநிறைவு  

பதித்தவர் : எழில்பாரதி in

காலையில் இருந்தே ஒரே பரபரப்பாக இருந்தான் முகிலன் இரவெல்லாம் தூக்கம் இல்லாது, சிவந்த அவன் கண்களில் தெரிந்தது. சீக்கிரம் கிளம்பிப் போக நினைத்திருந்ததால்.. அவசரமாக கிளம்பிட்டான்.

"அம்மா, நான் கிளம்பறேன்" என்றுமில்லாமல் புதிதாய் முகிலன் சீக்கிரம் கிளம்பியது அம்மாவிற்கு வியப்பாய் இருந்தது

"என்னப்பா!, மணி ஏழு தானே ஆகுது அதுக்குள்ள கிளம்பிட்டியே?"

"இல்லம்மா, கொஞ்சம் வெளி வேலை இருக்கு, அதான்"

"நைட்டும் நீ லேட்டா தான் வந்த..,. வந்தும் சாப்பிட்டு தூங்காம.., கம்யூட்டர்ல உட்கார்ந்துட்ட, இப்படியே இருந்தா உடம்பு என்னத்துக்குறது? காலையில வெறும் வயத்துல கிளம்ப வேணாம். இருப்பா.. ரெண்டு தோசை வார்த்து தாரேன். சாப்பிட்டு போப்பா.."

அம்மாவின் பேச்சுக்கு மறுபேச்சு பேசாமல் கட்டுப்பட்டான். இல்லாவிட்டால்.. தன்னை போக விடமாட்டார் என்று தெரியும். இரண்டு தோசைகள் சாப்பிடும் அளவு கூட மனம் பொறுக்கவில்லை.

"சரிம்மா போதும்.. நான் கிளம்பறேன்...." என்று வண்டியை எடுத்துக் கொண்டு பறந்தான்.

போகும் வழியில் வண்டியை நிறுத்தி, அன்றைய ஒரு செய்திதாள் வாங்கி, புரட்டிப்புரட்டி பார்த்தான். அவன் எதிர்பார்த்த செய்தி இல்லை. பக்கங்களை அவசரமாக புரட்டியபோது, ஒரு மூலையில் சின்னதாக ஒரு காலத்தில் அவன் எதிர்பார்த்த செய்தி வந்திருந்தது. எதிர்பார்ப்பு ஏமாற்றமாகும் போது வந்து சேரும் மனம் சோர்ந்து போவது இயல்பு.

முகிலனும் சோர்ந்து போனான். அப்படியே பத்திரிக்கையை சுருட்டி வண்டியின் முன் பக்கம் வைத்துவிட்டு, ஓட்டத்துவங்கினான்.

அலுவலகத்தில் வண்டியை நிறுத்திவிட்டு திரும்புகையில், "டேய் மச்சான் என்னடா இது, இன்னைக்கு இவ்வளவு சீக்கிரம் வந்துட்டே? அதிசயமா இருக்கியே... பின்னாடி வந்த முகிலனின் அலுவலக நண்பன் ரவி கேட்டது கூட, காதில் விழாதவனாய் அலுவலகத்தை நோக்கி நடந்தவனின் தோளைத் தட்டினான் ரவி.

"டேய் உன்னத்தான்டா.."

"ஓ... .சாரிடா, ஏதோ ஒரு யோசனையில் இருந்துட்டேன்....".

"அத விடு! என்ன சீக்கரம் வந்துட்டே...?"

"கொஞ்சம் வேலை இருந்த்ச்சுடா.. அதான்.."

அவன் வேலை என்று சென்னதை ரவியால் முழுமையாய் ஏற்றுக் கொள்ள முடியவில்லை இருவரும் ஒரே குழுவில் இருப்பதால் அவசரமான வேலைகள் எதுவும் இல்லை என்பதும் ரவிக்கு தெரியும். அப்புறம் ஏன் இப்படி சொல்றான்.

"டேய் முகில் என்னாச்சு உனக்கு... ஏன் ஒருமாதிரியா டென்சனா இருக்க?" ஒரு நிமிடம் ரவியையே பார்த்தான்.

"சொல்லவிருப்பம் இல்லாட்டி விடுடா..?"

"அப்படியெல்லாம் ஒன்னுமில்ல ரவி! இன்னைக்கு பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வருதுடா. அதான் டென்சனா இருக்கேன்..."

"டேய் லூசா நீ..., பத்தாம் வகுப்பு எல்லாம் நாம முடிச்சு பத்து வருசம் ஆகியிருக்கும். இப்போ ஏன்டா பயப்படறே?"

"அதுக்கில்லடா உனக்கு நியாபகம் இருக்கா? நாமெல்லாம் ரெண்டு மாசம் முன்னே ஒரு இல்லத்துக்கு போய் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்தோமே..."

"ம்ம்.. ஆமா.. அதுக்கென்ன இப்போ?"

"இல்லடா அவங்கெல்லாம் நல்ல படிக்கிற பிள்ளைங்கடா அவங்க பாடங்களை தேர்வுக்காக எப்படியும் படிச்சிருப்பாங்க. நாம அங்கே போய்... அவர்கள் மனநிலையை கலைத்து விட்டோமோ என்று ஒரு பயம் எனக்குள்ள இருந்துச்சுடா... ஒவ்வொரு மாணவனுக்கும் ஒவ்வொரு விதத்துல படிச்சா, எளிமையா மனசுல புரியும்.

நாம என்னவோ எளிமையா படிக்க அறிவுறைகள் சொல்லறதா நெனைச்சு, இப்படி தான் படிக்கனும், அது இதுன்னு நம்மோட கருத்துக்களை டிப்ஸ்ங்கற பேருல சொல்லி பசங்களை குழப்பிட்டோமோன்னு ஒரு குற்ற உணர்வு.

ஒரு வேளை பரிட்சைக்கு பல மாதங்கள் முன்னாடி இப்படி ஆலோசனை கூட்டம் நடத்தியிருந்தா, பரிட்சைக்கு படிக்க நாம சொல்லித்தந்த வழிகள், அவங்களுக்கு பொருத்தமானதான்னு சோதிச்சு பார்த்து, புரிஞ்சுக்க அவங்களுக்கு நேரம் இருந்திருக்கும். என்ன தான் நாம நல்லது செய்ய நினைச்சு, ஈஸியா பாடங்களை படிச்சு பரிட்சைக்கு தயாராகுறது எப்படின்னு கூட்டம் நடத்தியிருந்தாலும், பரிட்சை நெருங்குற, கடைசி சமயத்துல நாம சொன்னதை முழுசா எடுத்துக்கிட்டு, ஏற்கனவே அவங்க பின்பற்றி வர்ற படிப்பு முறைகளை மாற்றிக்கிட்டு , அதனால ஒருவேளை அவங்க தேர்வுல சரியா மதிப்பெண் பெறாம போனா? அது முழுக்க முழுக்க நம்மளேட தவறுடா. அதான் எனக்கு கொஞ்சம் டென்சனா இருக்கு...!"

முகிலன் சொல்வதிலும் நியாயம் இருப்பதாகவே பட்டது.

"நாம இல்லத்துக்கு போய் மாணவர்களின் தேர்வு முடிவுகளை கேட்கலாமா?"

"மச்சி இன்னும் நெட்டுலயே வந்திருக்காதுடா.. மதியம் வரை பார்க்கலாம். அப்படியும் அப்டேட் ஆகவில்லைன்னா.. மதியம் லஞ்ச் பிரேக்குல போய் எட்டிப் பார்த்துட்டு வந்திடலாம். பேசி வைத்துக்கொண்டாலும் வேலையே ஓடவில்லை. ஐந்து நிமிடத்துக்கு ஒரு முறை முடிவுகள் வரும்
தளத்தினை பார்த்து, பார்த்து வேலை செய்தான். அப்டேட் ஆகவே இல்லை.

மதியம் உணவு நேரம் வந்ததும், ரவியின் நாற்காலி தேடி ஓடினான். " இல்லத்துக்கு போய்ட்டு வரலாமா..?"

"ஒரு நிமிசம்டா... இதோ கிளம்பிடலாம்"

ரவி வண்டி ஓட்ட, முகிலன் பின்னால் அமர்ந்துக் கொண்டான் பயணம் முழுவதும் முகிலன் பதற்றமாய் இருந்தான். நல்லபடியா முடிவுகள் வந்திருக்கவேண்டும். எல்லோரும் வெற்றி பெற்றிருந்தால் நல்ல இருக்கும். அப்படி இல்லாமல்... நினைத்துப் பார்க்கவே வருத்தமாக இருந்தது. அவர்களை அவர்கள் போக்குக்கு போக விட்டிருக்கலாம். கடைசி நேரத்தில் இப்படி தங்களில் படிப்பறிவை அந்த மாணவர்கள் மீது ஏற்றிவிட்டிருக்க வேண்டாமோ.. மனம் கண்டபடி சிந்தித்துக்கொண்டே இருந்தது.

சேவை இல்லத்தை அடைந்ததும் முகிலன் ஓட்டமும் நடையுமாய் இல்லத்தின் காப்பாளரை சந்திக்கச் சென்றான்....

"சார் நாங்க எங்க அலுவலக குழு மூலமா , பரிட்சைக்கு தயாராகிக்கிட்டிருந்த பத்தாம் வகுப்பு பிள்ளைகளுக்கும, வழிகாட்டி பாடம் எடுக்க வந்திருந்தோம். இன்று முடிவுகள் வந்திருக்கு. நம்ம மாணவர்களின் தேர்ச்சி பற்றி தெரிந்துக் கொள்ளதான் வந்திருக்கோம்... முடிவுகள் எப்படி வந்திருக்கு சார்....?

"உங்களை எல்லம் நல்ல நினைவு இருக்குப்பா.... முடிவுகள் நல்லா வந்திருக்கு எல்லா பிள்ளைகளும் நல்ல மதிப்பெண் எடுத்திருக்காங்க..
உங்க நிகழ்ச்சி அவங்களுக்கு தன்னம்பிக்கையாகவும், பாடங்களை எளிய முறையில் உள்வாங்கிப் படிக்க உதவியா இருந்ததா சொன்னாங்க. உங்க அலுவலகத்திற்கு ஒரு நன்றிக் கடிதம் எழுதறதா இருக்கோம். அதுக்குள்ளே நீங்களே வந்து நிக்கிறீங்க.. மாணவர்களுக்கு ஆலோசனை நிகழ்ச்சியை இலவசமா நடத்தியது மட்டுமில்லாம,அவங்க தேர்வு முடிவுகளையும் ஆர்வமா வந்து பாக்குற உங்களை பாராட்டனுங்க தம்பி.

உங்க நல்ல மனசுக்கு நீங்க இன்னும் பெரிய நிலையை அடைஞ்சு ,இது போல பல நிகழ்ச்சிகள் நடத்தி பல இளைய தலைமுறைகளுக்கு சேவை செய்யனும்ன்னு வாழ்தறேன். உங்களை மாதிரி இளைய தலைமுறைகள், நம் நாட்டின் வருங்கால தூண்களா வரப்போற மாணவ சமுதாயத்திற்க்கு சேவை செஞ்சா, இந்தியா வல்லரசாகுற காலம் வெகு தொலைவில் இல்லைப்பா." நெகிழ்வுடன் உணர்ச்சி பெருக்கோடு சொன்னார்.
முகிலன் ரொம்ப மகிழ்ச்சியாய் உணர்ந்தான்.

"சரி சார், கேட்கவே ரொம்ப சந்தோசமா இருக்கு சார்... இனி நாங்க தனிப்பட்ட முறையிலையும் வந்து, அடிக்கடி பிள்ளைகளுக்கு பாடம் எடுக்க அனுமதி வேண்டும் சார்..."

"கண்டிப்பா வாங்க ரொம்ப பயனுள்ளதா இருக்கும்..."

"சரி சார் நாங்க போய்ட்டு வரோம். தங்கள் அலுவலகத்தில் ஏற்படுத்தபட்டிருக்கும் கல்விக்குழுவின் சேவை, விழலுக்கு இறைத்த நீராய்... வீணாகாமல் சரியாய் பலன் தந்திருப்பது மனநிறைவாய் இருந்தது. அந்த நிறைவோடு அலுவலகம் நோக்கி பயணித்தனர்.